×

அதிபர் டிரம்ப்-கமேனி மோதல் தீவிரம் ஈரானை அழித்து விடுவோம்… அமெரிக்காவை எரிப்போம்… மாறி மாறி வார்த்தை யுத்தம்

வாஷிங்டன்: ஈரானில் பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அரசு தலைமைக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஈரான் முழுவதும் நடக்கும் போராட்டத்தில் மக்களும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் பலியானோர் எண்ணிக்கை 4,516 ஆக அதிகரித்துள்ளது. 26,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலமாக ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடும் அப்பாவி மக்களை கொல்வதை ஈரான் உச்ச தலைவர் கமேனி நிறுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். சமீபத்தில் வெனிசுலா அதிபரை அவரது நாடு புகுந்து கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்ததை போல, ஈரான் உச்ச தலைவரும் அமெரிக்காவால் கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது. இதற்கேற்றார் போல் அமெரிக்காவின் அபிரகாம் போர் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி பயணத்து வருகிறது.

அமெரிக்க ராணுவ படையும் மத்திய கிழக்கு நோக்கி குவிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தால் ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் கடந்த சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘‘ஈரானில் புதிய தலைமைத்துவத்தை தேட வேண்டிய நேரம் வந்து விட்டது’’ என கூறி உள்ளார். மேலும் மற்றொரு பேட்டியில் அவர், ‘‘ஈரானிடம் இருந்து எனக்கு மிகப்பெரி அச்சுறுத்தல் உள்ளது.

எனக்கு ஏதாவது நடந்தால் பூமியிலிருந்து அந்நாட்டை அமெரிக்க ராணுவம் துடைந்தெறிந்து விடும்’’ என மிரட்டி உள்ளார். இது குறித்து ஈரான் ஆயுதப் படைகளின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அபோல் பாஸ்ல் ஷெகார்சி நேற்று அளித்த பேட்டியில், ‘‘எங்கள் தலைவரை நோக்கி எந்தவொரு ஆக்கிரமிப்பு கரமும் நீட்டப்பட்டால், அதை வெட்டுவது மட்டுமல்லாமல், அவர்களின் உலகத்திற்கே தீ வைத்து எரித்து விடுவோம். இது டிரம்புக்கும் நன்றாக தெரியும்’’ என கூறி உள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வால் கூறுகையில், ‘இம்முறை நாங்கள் தாக்குதலுக்கு உள்ளானால், எங்களிடம் உள்ள அத்தனை ஆயுதங்களையும் கொண்டு திருப்பி தாக்குவோம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் எங்கள் மீது தாக்குதல் நடத்திய போது காட்டிய நிதானத்தை கடைபிடிக்க மாட்டோம். இது வெறும் அச்சுறுத்தல் அல்ல. இதுதான் யதார்த்தம். முழு அளவிலான மோதல் நிச்சயம் கொடூரமானதாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்களையும் பாதிக்கும்’’ என கூறி உள்ளார்.

* இந்தியா-பாக். அணு ஆயுத போராகி இருக்கும்
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுத யுத்தம் வெடிக்கும் அபாயம் நிலவும் நிலையில் தனது முதலாம் ஆண்டு ஆட்சி நிறைவு விழாவில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘எனது பதவியின் முதலாம் ஆண்டில் 8 போர்களை நிறுத்தி உள்ளேன். அதிலும், இந்தியா-பாகிஸ்தான் போர் அணு ஆயுத யுத்தமாக மாறி இருக்கும். அப்படித்தான் நான் நினைக்கிறேன். அதை தடுத்து பல லட்சம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறேன்’’ என கூறி உள்ளார்.

Tags : President Trump ,Khameni ,Iran… ,America… ,Washington ,Iran ,
× RELATED பல்கோரியா அதிபர் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு