×

கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு

*2 கிலோ கிடைப்பதே அரிதாகிவிட்டது

தஞ்சாவூர் : கடும் பனிப்பொழிவு காரணமாக தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து அடியோடு குறைந்தது. 2 டன் வந்த நிலையில் தற்போது 2 கிலோ கிடைப்பதே அரிதாகிவிட்டது.தஞ்சை பூக்காரத்தெருவிலும், தொல்காப்பியர் சதுக்கம் பகுதியிலும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேதாரண்யம், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேபோல், தஞ்சையில் இருந்து மன்னார்குடி, நீடாமங்கலம், அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். இதேபோல், மழை, பனிக்காலங்களில் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் வரத்து குறைவாக இருக்கும். இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காணரமாக கடந்த 1 மாதமாக தஞ்சை மார்க்கெட்டில் மல்லிகைப்பூக்களை பார்ப்பது அரிதாக மாறிவிட்டது.

இது குறித்து தஞ்சை மலர் வணிக வளாக பூ மார்க்கெட் பொருளாளர் சவுந்திரராஜன் கூறுகையில்:பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மல்லிகைப்பூ வரத்து அதிகமாக இருக்கும். திருச்சி, ஸ்ரீரங்கம், கந்தர்வக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1 முதல் 2 டன் வரை மல்லிகைப்பூ விற்பனைக்கு வரும். தற்போது நிலவிவரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஒரு ஏக்கர் சாகுபடியில் சுமார் கால் கிலோ மல்லிகைப்பூ கிடைப்பதே அதிசயமாக இருக்கிறது.

இதனால், தஞ்சை பூ மார்கெட்டுக்கு மல்லிகைப்பூ வரத்து அடியோடு குறைந்து உள்ளது. மல்லிகைப்பூ இல்லாததால் திண்டுக்கல் முல்லை, வேதாரண்யம் முல்லை, ஜாதி பூக்களை மாற்றாக வைத்து விற்பனை செய்து வருகிறோம். இவை கிலோ ரூ.800 முதல் ரூ.1,700 வரை விற்பனையாகின்றன. அதுமட்டுமினறி மற்ற பூக்களின் உற்பத்தி அதிகளவில் உள்ளது. குறிப்பாக செண்டிப்பூ, செவ்வந்தி பூ உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tanjai Flower Market ,Thanjavur ,Thantai Flower Park ,Tolkappiar Square ,
× RELATED நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத்...