×

விரைவில் வெள்ளிங்கிரி மலை தரிசனத்திற்கு அனுமதி

கோவை: கோவை வெள்ளிங்கிரி மலை ஏற விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலை கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1840 மீட்டர் உயரத்தில் 7 வது மலையின் மீது வெள்ளிங்கிரி குகை கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரம் மலையேறி கிரி மலை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். குறிப்பாக சித்ரா பவுர்ணமி நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வார்கள்.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த கோயிலில் மலை ஏற பக்தர்கள் வருவது வழக்கம். அடுத்த மாதம் முதல் மலையேற்ற அனுமதி வழங்கப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிங்கிரி மலை கோயிலை வழிபாட்டிற்காக திறக்க ஏற்பாடுகள் நடக்கிறது. வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தினர் இதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். மலை கோயில் படிக்கட்டு நடை திறக்க அனுமதி வழங்கும் முன் கோயில் நிர்வாகம், வனத்துறையினர் மலைப்பாதை சீரமைப்பு பணி நடத்த வேண்டும். சிலர், பாதை இல்லாத பகுதி வழியாக காட்டிற்குள் சென்று மலையேற முயற்சிப்பதாக தெரிகிறது.

பாதுகாப்பு இல்லாமல் அப்படி செல்வதால் பாதிப்பு ஏற்படும். கோயிலுக்கு செல்லும் வனப்பகுதி பாதைகளை சீரமைத்தல், வழிப்பாதை கடைகளுக்கு அனுமதி வழங்குதல், குடிநீர் மற்றும் மூங்கில் கம்புகளை பக்தர்களின் பயன்பாட்டிற்காக வழங்குதல் போன்ற பணிகளை விரைவாக செய்ய வேண்டும். அனைத்து மலைகளிலும் பக்தர்கள் தங்கும் இடம் ஒதுக்க வேண்டும். கழிவறைகளை முறையாக ஒதுக்கி தர வேண்டும். பாதைகளில் உள்ள மரக்கிளை, புதர்களை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellingiri Hill ,Coimbatore ,Vellingiri Hill Temple ,Western Ghats ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...