×

மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!

மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 31 புதிய வாகனங்கள், சென்னை என்விரோ சொலியூசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.30.65 கோடி மதிப்பீட்டில் 33 புதிய வாகனங்கள் என மொத்தம் ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை, தரக்கட்டுப்பாடு, அலுவலர்களின் களஆய்வு, நடைபாதை மற்றும் பேருந்து நிழற்குடைகளில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தல், நாய்கள் பராமரிப்பு, கடற்கரை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வகை பயன்பாட்டிற்கான 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை இன்று (12.01.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துவதால் பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, இவ்விடங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தி தூய்மையாக பராமரிக்க 6 எண்ணிக்கையில் 2 KL கொள்ளளவு கொண்ட தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் இலகுரக வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு மேயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அலுவலர்களின் களஆய்வுப் பணிகளுக்காக புதியதாக 17 எண்ணிக்கையில் ஆய்வு வாகனங்கள், பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திடும் வகையில், மாநகராட்சியின் நாய்கள் பிடிக்கும் 6 வாகனங்கள், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை மற்றும் உத்தண்டி பகுதியில் உள்ள கடற்கரை மணற்பரப்பினை சுத்தம் செய்யும் பணிக்காக கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் வாகனம், சாலைப் பணிகள், மண்டலங்கள் மற்றும் துறைகள் சார்ந்த பல்வேறு கட்டுமானப் பணிகளின் இனங்களை பணிகள் நடைபெறும் இடத்திற்கு ஆய்வு உபகரணங்களை எடுத்துச் சென்று பரிசோதனைகள் செய்து தரத்தை உறுதி செய்வதற்காக, நடமாடும் தரக்கட்டுப்பாட்டு களஆய்வு வாகனம் என மொத்தம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 31 வாகனங்களை மேயர் இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

மேலும், திருவாளர் சென்னை என்விரோ சொலியூசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் இராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளின் ஒரு பகுதியாக, குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்ய 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 வாகனங்கள், நகர்ப்புற பகுதிகளில் கண்டறியப்படும் இறந்த விலங்குகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து அகற்றுவதற்காக 2 வாகனங்கள்,
தீ விபத்துகள் ஏற்படும் சூழ்நிலைகளில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தீயணைப்பு இ-வாகனங்கள், மண்டலம்-5 மற்றும் 6க்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் அல்லாத தேவைகளுக்காக நீர் வழங்க ஏதுவாக 2500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 மின்சார வாகனங்கள், மொத்தக் கழிவுகளை உருவாக்குபவர்களிடமிருந்து (Bulk Waste Generators) குப்பை சேகரிப்புக்காக 1 டன் கொள்ளளவு கொண்ட 5 மின்சார வாகனங்கள், கடற்கரைகளில் மணல் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்யவும், சேகரிக்கவும் டிராக்டர் அடிப்படையிலான 12 வாகனங்கள் என மொத்தம் ரூ.30.65 கோடி மதிப்பீட்டில் 33 புதிய வாகனங்களின் பயன்பாட்டினையும் மேயர் இன்று (12.01.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதுதவிர, பெரிய அளவு மற்றும் பேரிடர் கழிவுகளைக் கையாளுவதற்காக ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 கிராபிள் லோடர் வாகனங்களையும் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையாளர் (சுகாதாரம்) முனைவர் வீ.ப.ஜெயசீலன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், நிலைக் குழுத் தலைவர்கள் டாக்டர் கோ. சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), த.விசுவநாதன் (கல்வி), தலைமைப் பொறியாளர்கள் பாலமுரளி, சீனிவாசன், ராம்கி நிறுவன துணைத் தலைவர் வெங்கடேசன், திட்டத் தலைவர் பரிசுத்தம் வேதமுத்து, செயலாக்கத் தலைவர் ரவி சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mayor R.R. ,Priya ,Mayor R. ,Metropolitan Chennai Municipal Corporation ,Chennai Enviro Solution Private Limited ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...