உடுமலை: பொங்கல் பண்டிகை நெருங்குவதால், உடுமலை பகுதியில் வெல்லம் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைந்த விலைக்கு வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், அமராவதி பாசனப்பகுதிகளில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் கரும்பினை அறுவடை செய்து பாகு காய்ச்சி அவற்றை உருண்டை வெல்லமாகவும், அச்சு வெல்லமாகவும், நாட்டு சர்க்கரையாகவும் மாற்றி சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். முன்பு பலர் அமராவதி சர்க்கரை ஆலைக்கு தங்களது கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வந்தனர். தற்போது, ஆலை இயங்காததால் அவர்களும் வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சாமராயபட்டி, கொழுமம், குமரலிங்கம், பாப்பான்குளம், சாளரபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வெல்ல மண்டிகள் அதிகளவில் உள்ளன.
பழநியில் பஞ்சாமிர்தம் தயாரிக்கவும், கேரள மாநிலம் சபரிமலை, குருவாயூர் கிருஷ்ணன் கோயில் போன்றவற்றில் வழங்கப்படும் பிரசாதத்திற்கும் உடுமலையில் இருந்தே வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் வெல்லம் விற்பனை அதிகமாக இருக்கும். அதன்படி, தற்போது உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து, கரும்பு விவசாயிகள் மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
கரும்பு நடவு செய்தால், 11 மாதங்களில் விளைந்து அறுவடை செய்கிறோம். ஏக்கருக்கு ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஏக்கருக்கு 40 முதல் 50 டன் கரும்பு கிடைக்கும். ஒரு டன் கரும்பில் இருந்து 110 கிலோ வெல்லம் தயாரிக்கலாம். உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், கரும்பு சர்க்கரை என பல வகைகளில் தயார் செய்கிறோம். 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் ரூ.1450-க்கு தற்போது விற்கப்படுகிறது. கேரளா, திருச்சி, சேலம், பொள்ளாச்சியில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.கடந்த மாதம் சிப்பம் ரூ.1250-க்கு விற்றது. தற்போது பொங்கலையொட்டி விலை அதிகரித்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவுதான். கடந்த ஆண்டு சிப்பம் ரூ.1700 வரை விற்பனையானது. இப்போது, உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துவிட்டது.
அரசு சார்பில் பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெல்லம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளாக வெல்லம் வழங்கப்படவில்லை. அரசே கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். இதன் மூலம் கரும்பு பயிரிட்ட விவசாயிகள், வெல்லம் காய்ச்சும் தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பட வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரிகள் முன்கூட்டியே விலைநிர்ணயம் செய்வது தவிர்க்கப்பட்டு, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
