தெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், அந்நாட்டு அரசு ராணுவ ஜாமர்களைக் கொண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை முடக்கியுள்ளது. நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்பு இணைய சேவையை முடக்கிய அரசு முதல் முறையாக, சாட்டிலைட் இணைய சேவையும் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டு இணைய இணைப்பு துண்டிக்கப்படும்போது, போராட்டகாரர்கள் மற்றும் கலவரகார்களுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு போராட்டம் மற்றும் கலவரத்தை தடுக்க வழிவகுக்கும். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இணைய சேவை முடக்கப்பட்ட நிலையில், இந்த முடக்கம் செயற்கைக்கோள் இணைப்புகளையும் எட்டியுள்ளது. ஸ்டார்லிங்கின் அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் போக்குவரத்தில் சுமார் 30 சதவீதம் (ஆரம்பத்தில்) பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது சில மணிநேரங்களுக்குள் “80 சதவீதத்திற்கும் மேலாக” விரைவாக அதிகரித்தது.
முந்தைய முடக்கங்களின் போது இருந்ததை விட, ஈரானில் (ஸ்டார்லிங்க்) ரிசீவர்களின் பயன்பாடு இப்போது மிக அதிகமாக உள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரான் அரசு ஸ்டார்லிங்க் செயல்பட அங்கீகாரம் வழங்காத போதிலும் ஸ்டார்லிங்க் ரிசீவர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் அந்த சேவையை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் சட்டவிரோதமாக கருதப்படுகிறது.

