×

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மயக்கம் மற்றும் உடல்நல உபாதைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) காலை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 10) வீட்டில் இருந்தபோது, ஜெகதீப் தன்கர் இரண்டு முறை மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இரண்டு நாட்கள் ஓய்விற்குப் பிறகு, மேல் சிகிச்சை மற்றும் விரிவான பரிசோதனைக்காக இன்று அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு MRI ஸ்கேனிங் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே தன்கர் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது அடிக்கடி மயக்கமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்ச், உத்தரகண்ட், கேரளா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் போதும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி, தனது உடல்நிலையை முன்னிலைப்படுத்தி ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Former Vice President ,Republic ,Jegdeep Tankar ,AIIMS Hospital ,Delhi ,Republic of India ,Jagdeep Tankar ,
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...