×

பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு !

டெல்லி: பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. நாளையும் விசாரணை என கூறப்பட்ட நிலையில் விஜயின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது.

இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 மண்யளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

இதையடுத்து விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதை நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா? கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? எப்போது சம்பவ இடத்தில் இருந்து வெளியேறினீர்கள்? என விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

விஜயிடம் நடைபெற்ற விசாரணை வீடியோ பதிவு செய்யப்படவில்லை எனவும் ஒப்புதல் கையெழுத்து பெறப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. நாளையும் விசாரணை என கூறப்பட்ட நிலையில் விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று சிபிஐ ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது.விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags : Pongal festival ,CPI ,Vijay ,Delhi ,CBI ,Karur ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...