- யூனியன் அரசு
- மம்தா
- ED
- திரிணமுல்
- கொல்கத்தா
- மம்தா பானர்ஜி
- அமலாக்க இயக்குநரகம்
- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு வங்கம்
கொல்கத்தா: ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மீண்டும் வீதி சண்டை பாணி அரசியலை மம்தா பானர்ஜி எடுத்துள்ள நிலையில், நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறை, திரிணாமுல் காங்கிரஸ் தரப்பிலும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை எதிர்ப்பது புதிதல்ல. மாநிலத்தில் நிலக்கரி கடத்தல் ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் தலைவர் பிரதிக் ஜெயின் வீட்டில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குச் சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாநிலக் காவல்துறையினர் உதவியுடன் அங்கிருந்த முக்கிய மின்னணுச் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய ஒரு பெரிய பச்சைக் கோப்பை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், சால்ட் லேக் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கும் சென்று மம்தா பானர்ஜி மற்றும் அவரது உதவியாளர்கள் அங்கிருந்தும் சில ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளனர். இவ்விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே 2019ம் ஆண்டு கொல்கத்தா காவல் ஆணையர் விவகாரம் மற்றும் 2021ம் ஆண்டு நிலக்கரி ஊழல் விசாரணையின் போது, அவர் நேரடியாகக் களத்தில் இறங்கித் தலையிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் அதிகாரிகளுக்கும், மாநிலக் காவல்துறைக்கும் இடையே மோதலை உருவாக்கி, அதைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதையே மம்தா வழக்கமாகக் கொண்டுள்ளார் என்ற விமர்சனமும் உள்ளது. நேற்று ‘ஐ-பேக்’ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது, மம்தா பானர்ஜி நேரடியாக சென்று அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றது இந்த ஆண்டுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் வியூகங்கள் அடங்கிய பச்சைக் கோப்பு என்பது கூறப்படுகிறது. மம்தாவின் செயல்பாடுகள் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு விடப்பட்ட நேரடிச் சவாலாகவும் பார்க்கப்படுகிறது. அதேநேரம் மம்தாவின் இந்த ‘வீதிச் சண்டை’ பாணி அரசியல் மீண்டும் மேற்குவங்க அரசியலில் வெளிப்படுத்தியதை மாநில காங்கிரசும் விமர்சித்துள்ளது.
ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை வங்காளத்தின் மீதான தாக்குதலாக மம்தா சித்தரிக்கிறார். பாஜக மற்றும் ஒன்றிய ஏஜென்சிகளை ‘வெளியாட்கள்’ என்று வர்ணிக்கும் மம்தா பானர்ஜி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ‘மோசமான மற்றும் குறும்புக்காரர்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார். ‘வாக்காளர் பட்டியலிலிருந்து உண்மையான வாக்காளர்களை நீக்கவும், கட்சியின் தரவுகளைத் திருடவுமே பாஜக முயற்சிக்கிறது’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக ஜாதவ்பூர் முதல் ஹஸ்ரா வரை இன்று மாபெரும் கண்டனப் பேரணியையும் மம்தா பானர்ஜி நடத்துகிறார். நேற்று நடந்த சம்பவத்தை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘முதல்வர் தனது அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஒன்றிய அரசின் விசாரணைக்குத் தடையை ஏற்படுத்தியுள்ளார்; ஆதாரங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளார்’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பிலும் எதிர் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மம்தா பானர்ஜி தரப்பில் கூறுகையில், ‘வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சீர்குலைப்பதற்காகவும், வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் வியூகங்களைத் திருடுவதற்காகவும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நடத்திய தரவு கொள்ளை இது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி சுவ்ரா கோஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், முதலமைச்சர் மீதான அமலாக்கத்துறையின் நேரடிக் குற்றச்சாட்டுத் தேசிய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஆளுநருக்கு கொலை மிரட்டல்!
மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல்கள் நிலவி வரும் சூழலில், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கு நேற்று நள்ளிரவு ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. அதில், ‘வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக’ ஆளுநருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஆளுநருக்கு இதுபோன்று பலமுறை மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், தற்போது வந்துள்ள மிரட்டல் மிகத் தீவிரமாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஆளுநரின் பாதுகாப்பை உறுதி செய்யக் கொல்கத்தா காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவிலேயே உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டு, ஆளுநர் மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கும் வேளையில், அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள சூழலில், ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் சம்பவம் மாநில அரசியலில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
