லண்டன்: பிரபல தொலைக்காட்சி மருத்துவரும் நடனக் கலைஞருமான பூனம் கிருஷ்ணன் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங்’ நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் டாக்டர் பூனம் கிருஷ்ணன் (42). இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர் ஆவார். கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூனம் கிருஷ்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தனக்கு இரண்டாம் நிலை மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதை பூனம் கிருஷ்ணன் நேற்று சமூக வலைதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது உள்ளுணர்வு ஏதோ தவறு இருப்பதாக உணர்த்தியதாலேயே பரிசோதனை செய்தேன். கடந்த 5 மாதங்களாக எனது குழந்தைகளுக்காகவும், மனதை தேற்றிக்கொள்ளவும் இந்த நோயைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினாலும், நாமே நோயாளியாக மாறும்போது ஏற்படும் வலியை எதிர்கொள்ள எதனாலும் தயார்படுத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது அவருக்குத் திட்டமிடப்பட்ட 6 சுற்றுகள் கொண்ட கீமோதெரபி சிகிச்சையில், 5 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இவரது பதிவைக் கண்ட சக நடனக் கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
