×

உளுந்தூர்பேட்டை அருகே இன்று சென்னை பஸ் தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்து: வாலிபர் பலி;10 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை சென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ் தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். 10 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை குமார் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் இடிபாட்டுக்குள் சிக்கி பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் சென்ற நாமக்கல்லை சேர்ந்த ஜியாவுதீன் (35) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்சில் சென்ற கரூர் அசோகன் (60) உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Ulundurpet ,Ulunturpet ,
× RELATED படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை...