- விண்ணதிர ஆருத்ரா தரிசன தேரோட்டம்
- சிதம்பரம் நடராஜர் கோயில்
- சிதம்பரம்
- ஆருத்ர தரிசனம்
- இறைவன்
- மகா
- நடராஜர் கோயில்
- கடலூர் மாவட்டம் சிதம்பரம்...
சிதம்பரம், ஜன. 3: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆணி மாதம் நடக்கும் திருமஞ்சன தரிசனமும் சிறப்பு வாய்ந்தது. நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக கோயிலின் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சித் சபையில் இருந்து அதிகாலை 4.30 மணி அளவில் புறப்பாடாகி உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து தேவ சபையில் சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. பின்னர் கீழ ரத வீதியில் ஜோடிக்கப்பட்ட 5 தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் மேள வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என முழக்கம் வின்னதிர பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோடும் நான்கு வீதிகளிலும் சிவ வாத்தியங்கள் முழங்க, சிலம்பாட்டம், கோலாட்டம் நடைபெற்றது. மேலும் சிவன் பார்வதி வேடமடைந்து நடனம் ஆடியபடி ஆண்கள், பெண்கள் வந்தனர். சிறுவர் சிறுமியர் சுருள்வால் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இன்று (3ம் தேதி) சிவகாமசுந்தரி சமேத மந்த் நடராஜ மூர்த்திக்கு ராஜசபையில் மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன. நாளை (4ம் தேதி) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவும், 5ம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன. தேரோட்ட விழாவில் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டது. எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
