மரக்காணம், டிச. 30: மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி செந்தாமரை (67). இவர் அனுமந்தை பேருந்து நிறுத்தம் அருகில் இசிஆர் சாலையோரத்தில் மீன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செந்தாமரை தனது மீன் கடையில் மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது நேற்று மதியம் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அந்த தொழிற்சாலை பேருந்து மரக்காணம் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மீன் கடை மீது மோதி விட்டு பள்ளத்தில் இறங்கியது. இதில் கடையின் முன் பகுதியில் அமர்ந்து இருந்த செந்தாமரை பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மரக்காணம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனக செட்டி குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
