தவளக்குப்பம், ஜன. 3: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள 1,460 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். புதுச்சேரி அரியாங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று காலை தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரியாங்குப்பம் ஆர்.கே.நகரில் உள்ள கைப்பந்து மைதானத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், தெற்கு டெல்லி பதர்புர் லால்கன் பகுதியை சேர்ந்த லக்ஷ்யா விஜ் (21) என்பதும், அவர் தற்போது தவளக்குப்பம் நல்லவாடு சாலையில் உள்ள சப்தகிரி நகர் ஆரஞ்சு ஹவுசில் வசித்து வருவதும், கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். கஞ்சாவை சில முக்கிய பிரமுகர்களின் தொடர்பால் பெங்களூருவில் இருந்து கொரியரில் வரவழைத்து விற்றுள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 3 பைகளில் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 460 கிராம் கஞ்சா, செல்போன் மற்றும் பைக்கை கைப்பற்றினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா விற்பனையில் மருத்துவக் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
