×

ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (31.12.2025) குறிஞ்சி முகாம் அலுவலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 8.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணியினை காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் கிராமத்தில் 17.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி அமைக்கும் பணி, சேலம் மாவட்ட பல்நோக்கு விளையாட்டு வளாகத்தில் 11.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஓடுதள பாதை அமைக்கும் பணி, இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 12.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணி என மொத்தம் 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர், உலகின் எப்பகுதியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார். இந்த அறக்கட்டளை நிதியின் கீழ் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு தேவையான அதிநவீன விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொள்ளவும், தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவு, தங்குமிடம், பயிற்சி பெறுதல், பயணத்திற்கான செலவுகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற மற்றும் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தயார் செய்யவதற்காக தடகள வீரர்கள் ர.மானவ், ஜெ.ஆதர்ஷ் ராம், கூடைப்பந்தாட்ட வீரர் பி. ஃபியோடர் ஆதித்தன், குத்துச் சண்டை வீரர் பி.தர்ஷன், தடகள வீரர் யோபின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வாலிபால் வீராங்கனைகள் ம. ராகஸ்ரீ , பா. சாதனா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட மொத்தம் 2,80,000/- ரூபாய்க்கான காசோலையை துணை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சைக்கிளிங் வீரர்கள் ச.பிரனேஷ் மற்றும் சௌ.கவிஷ் ஆகியோருக்கு மொத்தம் 12,48,580/- மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வரும் நீச்சல் வீர்ர் உ. அபிஷேக்கிற்கு மலேசியாவிற்கு சென்று பயிற்சி மேற்கொள்வதற்காக ரூ.35,000/- க்கான காசோலையை துணை முதலமைச்சர் வழங்கினார்.

இன்றைய தினம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியின் கீழ் மொத்தம் 15,63,580/- ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான உதவித்தொகை காசோலைகளை வழங்கினார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ், ரோல் பால் மற்றும் பூப்பந்தாட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இன்று துணை முதலமைச்சர் அவர்களை சந்தித்து தாங்கள் வென்ற பதங்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இரா. ராஜேந்திரன், பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இ.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy Chief Assistant Secretary ,Stalin ,Chennai ,Deputy Chief ,Udayanidhi Stalin ,Deputy Chief Minister Assistant Secretary ,Department of Youth Welfare and Sport Development ,Marechi Camp Office ,
× RELATED மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல்...