×

சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், வணிக வளாகங்களில் கோலாகலம்: புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள் களைகட்டியது. கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொதுமக்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என வாண வேடிக்கைகளுடன், கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நாடு முழுவதும் 2026ம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. 2025ம் ஆண்டை விடைகொடுத்து புத்தாண்டை பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் என அனைத்து பொது இடங்களிலும் வாண வேடிக்கைகளுடன் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கி விடிய விடிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி வரவேற்றனர்.

முன்னதாக புத்தாண்டை வரவேற்க காவல்துறை அனுமதி வழங்கிய கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நேற்று இரவு 7 மணி முதலே குவிந்தனர். இதனால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி வெங்கடராமன் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள் மேற்பார்வையில் மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

முன்னதாக, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக போலீசார் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து பைக் ரேஸ் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். அதிக போதையில் இருந்த நபர்களை போலீசார் சோதனை நடத்தும் பகுதியில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைத்து இன்று காலை போதை தெளிந்த பிறகு அவர்களின் உறவினர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ் குமார், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் நேரடி கண்காணிப்பில் 19 ஆயிரம் போலீசார், 1500 ஊர்க்காவல் படையினருடன் சிறப்பான பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

குற்றங்களை தடுக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நடந்தது. அப்போது குற்றப்பின்னணியில் உள்ள நபர்களை போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் செயலி மூலம் பிடித்தனர். புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்காக கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சென்னை முழுவதும் இருசக்கர வாகனங்களில் 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டது.

கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய பிறகு உற்சாக மிகுதியில் கூட்டத்தில் இருந்த இளம்பெண்களை கவரும் நோக்குடன் பைக் சாகசங்களில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் பிடித்தனர். மேலும், பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களை சிறப்பு தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து வேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களின் பைக்குகள் சம்பந்தப்பட இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் அதிகமாக கூடிய இடமான மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘பருந்து’ செயலி மூலம் டிரோன்கள் பறக்கவிட்டு கண்காணித்தனர். மேலும் கடற்கரை பகுதியில் கடலில் யாரும் இறங்காதபடி மெரினா கடற்கரை உயிர்காக்கும் படையினர் மற்றும் குதிரைப்படை வீரர்கள் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

மெரினா கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு அனைவரும் ஒரே நேரத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ என விண்ணை முட்டும் வகையில் கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது பொதுமக்கள் பலர் கேக் வெட்டி அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளம்பெண்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்ட நபர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.

காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளுடன் நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், பண்ணை வீடுகளில் மது விருந்துகளுடன் டிஜே நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது போலீசார் கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ரிசாட்டுகள், பண்ணை வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். எச்சரிக்கையை மீறி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்திய ஏற்பாட்டாளர்கள் மீது வீடியோ ஆதாரங்களின்படி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்தது. மேலும், கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல மாநிலம் முழுவதும் நகரங்களில் உள்ள ஓட்டல்களில் சிறப்பு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர்.

பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் புத்தாண்டு வாழ்த்து
சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் அனைத்து காவல் உயர் அதிகாரிகள், அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், அமைச்சுப் பணியாளர்கள், காவல் குடும்பத்தினர் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அனைத்து அங்கத்தினருக்கும் மனமார்ந்த 2026ம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.

Tags : New Year's Eve ,Chennai ,New Year ,Marina Beach ,Year ,
× RELATED 2025ம் ஆண்டில் அரசுப் பணிகளுக்கு 20,471 தேர்வர்கள் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிக்கை