×

மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பால் கடும் பீதி; மன உளைச்சலால் 50 பேர் மரணம்?… தேர்தல் ஆணையர் மீது போலீசில் புகார்

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியின் போது ஏற்பட்ட அச்சத்தால் பலர் உயிரிழந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மீது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகிறது. இதில் பலரது பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராகும்படி பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதான துர்ஜன் மாஜி என்பவர், கடந்த 29ம் தேதி ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

2002ம் ஆண்டு பட்டியலில் பெயர் இருந்தும், தற்போதைய ஆன்லைன் பட்டியலில் தனது பெயர் விடுபட்டதால் அவர் அதிர்ச்சியில் இருந்ததாக அவரது மகன் கூறியுள்ளார். இதேபோல் ஹவுரா பகுதியைச் சேர்ந்த 64 வயது ஜமாத் அலி சேக் மற்றும் கிழக்கு மிட்னாபூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது பிமல் ஷீ ஆகியோரும் விசாரணை நோட்டீஸ் வந்த அதிர்ச்சியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இவர்களின் குடும்பத்தினர், ‘மன ரீதியாக துன்புறுத்தியது மற்றும் தற்கொலைக்கு தூண்டியது’ ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவலில், ‘வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பீதி மற்றும் சோர்வு காரணமாக இதுவரை 18 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘இது மிகப்பெரிய மோசடி, தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டால் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ என்று எச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், ‘அதிகாரப்பூர்வ பணியில் ஈடுபடும் தலைமைத் தேர்தல் ஆணையர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை’ என்று கூறியுள்ளதுடன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைனில் பெயர் விடுபட்ட 1.3 லட்சம் வாக்காளர்கள் விசாரணைக்கு வரத் தேவையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Tags : West Bengal ,Kolkata ,Chief Election Commissioner ,West Bengal… ,
× RELATED நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு:...