*விவசாயிகள் கோரிக்கை
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை தொழிலான ஆடு, மாடு வளர்ப்பு பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 2 லட்சம் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், பசுக்கள் உள்ளன. கடந்த புரட்டாசி மாதம் முதல் மாசி மாதம் வரை மழை மற்றும் பனிப்பொழிவு காலமாகும். வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், பசுக்கள் என கால்நடைகள், கோவில்பட்டி கோட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
மழை காலங்களில் ஆடுகளுக்கு திடீரென நீல நாக்கு நோய், வாய்க்கானம், கால் கானம், மூக்குச்சளி, வலிப்பு போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறது. போதிய சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் அவை இறந்து விடுகின்றன. கடந்தாண்டு மழைக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் நடமாடும் கால்நடை மருத்துவக்கூடம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது மழை காலங்களில் முளைக்கின்ற பசுந்தீவனங்களை கால்நடைகள் உணவாக உட்கொள்கின்றன. இத்தீவனத்தில் பனித்துளி அதிகம் காணப்படுகிறது. காலை மேய்ச்சலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும்போது ஆடுகளுக்கு செரிமானம் ஏற்படாமலும், வாய்கானம், மூக்குச்சளி போன்ற நோய்களால் நோய் வாய்ப்பட்டு மடிந்து விடுகின்றது. இதனால் மழை காலங்களில் ஆடுகளை காப்பாற்ற பல்வேறு வகையான நாட்டு வைத்தியம் செய்தும் பலனில்லை.
மழை காலம் தொடங்கும் முன்னரே கால்நடைகளுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போடப்பட்டிருந்தால் இறப்பை தவிர்த்திருக்கலாம். தற்போதும் ஆடு வளர்க்கும் கிராமங்களில் தொடர்ந்து நோய் பாதிப்பு கடுமையாக உள்ளது. எனவே கிராமங்கள் தோறும் நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி மற்றும் உரிய சிகிச்சை அளித்து ஆடுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
