×

திருவண்ணாமலையில் ரூ.1400 கோடி மதிப்பில் 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 

* வேளாண் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடந்த அரசு விழாவில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2 நாள் மாநில அளவிலான வேளாண் கண்காட்சியையும் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 3 இடங்களில் கலைஞர் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேளாண் கண்காட்சி தொடக்கம், கலைஞர் திருவுருவ சிலை திறப்பு விழா நடக்கிறது. முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலைஞர் சிலையையும் திறந்து வைத்தார். அதன்பிறகு தியாகதுருகம், மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். முதல்வருக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள திடலில் அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான 2 நாள் வேளாண் கண்காட்சியை இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார். இதற்காக வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் 50ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநில அளவிலான வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்எஸ் தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தர்ப்பகராஜ் வரவேற்றார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வேளாண் கண்காட்சியில் சுமார் 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், புதிய வேளாண் தொழில்நுட்பம், பயிர் சாகுபடி மற்றும் மகசூல் அதிகரிப்பதற்கான வழிமுறைகள், புதிய ரகங்கள் அறிமுகம், மண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன. மேலும், வேளாண் வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து காலை 11 மணியளவில் திருவண்ணாமலை மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்எஸ் தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ். அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தர்ப்பகராஜ் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, வேளாண் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 2,66,194 பயனாளிகளுக்கு ரூ.1,400.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த வணிக வளாகம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், மாவட்ட அரசு மாதிரி பள்ளி உள்பட ரூ.631.48 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 314 பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.63.74 கோடி மதிப்பிலான 46 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலை மாநகரில் ரூ.2.83 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோயில் காவல் நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதேபோல் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.161.90 கோடி மதிப்பில் நான்கு வழி சாலைகளாக தரம் உயர்த்தப்பட்ட திருவண்ணாமலை- அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-செய்யாறு சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். கமண்டல நாகநதி, செய்யாறு, சுகநதி, பாம்பாறு, நாகநதி ஆகியவற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், ரூ.127 கோடி மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உயர்மட்ட பாலங்கள் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில், கலசப்பாக்கம், வந்தவாசி, செய்யாறு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவ சிலையை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதல்வரின் வருகையால், திருவண்ணாமலை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED திருவாரூரில் பெற்றோரை இழந்த 3...