×

2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது: ஆளுநர் ரவி உரையாற்றுகிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

 

சென்னை: தமிழக அரசின் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் உரை படிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு இன்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரினை ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 174/1ன் கீழ் தமிழ்நாடு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து ஜனவரி மாதம் 20ம் தேதி (செவ்வாய்) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அன்றைய தினமே ஆளுனர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசு முதல்வர், அமைச்சர்களால் தயாரித்து வழங்குகின்ற கவர்னர் உரையை ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டம் 176/1ன் கீழ் பேரவைக்கு வாசித்து அளிப்பார். ஆளுநர் உரை வாசித்து முடித்ததும், அன்றைய தின கூட்டம் முடிவு பெறும். பின்னர் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாள் விவாதம் நடைபெறும் என்று கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் சட்டமன்ற மரபுகள் எதுவும் மாற்றப்படாது. வழக்கமாக, ஒவ்வொரு ஆளுநர் உரை வாசிப்பு நிகழ்ச்சியின்போது கடைபிடிக்கப்படும் முறையே இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படும்.

ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில்தான் விவாதித்து முடிவு எடுக்கப்படும். அலுவல் ஆய்வு குழுவில் என்னென்ன கருத்துக்கள் கூறுகிறார்களோ, அதையெல்லாம் உள்வாங்கி நல்ல முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தின் கவர்னர் உரை படிக்கும்போது, அதை முழுமையாக படிக்காமல் வெளியேறிய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறியது.

அதனால் வருகிற ஜனவரி 20ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை படிப்பாரா? அல்லது ஏதாவது புது பிரச்னையை கிளப்புவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

Tags : Governor ,Ravi ,Speaker Dad ,Chennai ,Tamil Nadu ,R. N. ,Speaker ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...