மதுரை: ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை போல், இந்தியாவிலும் ஒன்றிய அரசு கொண்டு வரவேண்டும் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு: இணைய தளங்களில் ஆபாச வீடியோ படங்கள் தாராளமாக உலாவுகின்றன. இதுபோன்ற ஆபாச படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இதனால், சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் பாழாகும்.
எனவே, தேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இதுபோன்ற ஆபாச வீடியோக்களை தடுக்கும்விதமான மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று தேசிய மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்களின் உறுப்பினர் செயலாளர்கள், இன்டர்நெட் சர்வீசஸ் புரோவைடர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க மென்பொருள் அவசியம். இதுபோன்ற வீடியோக்களை குழந்தைகள் பார்த்தால் பாதிப்பு அதிகம் ஏற்படும்.
அதனால், ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தடையை ஒன்றிய அரசும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றிய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளனர்.
