×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் டிச.30ல் சொர்க்கவாசல் திறப்பு

 

மதுரை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30ம் தேதி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதுரையில் அழகர்கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் மற்றும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றவையாக உள்ளன. இந்த கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 20ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது வழித்துணைப் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல் மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் கோயில்களின் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான தெய்வநாயகப் பெருமாள் கோயில் கொந்தகையில் அமைந்துள்ளது.

தற்போது அங்கு கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி உலா ஏற்பாடுகள் ஏதும் நடைபெறாது. ஆனால், அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு மட்டும் நடைபெறும். அதனை காண்பதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Paradise Gate ,Perumal Temples ,Vaikunda Ekadasi ,Madurai ,Madura ,Kudalalagar Perumal Temple ,Thirumogur Kalamegab Perumal Temple ,
× RELATED முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை...