×

விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி

கோவை: நாங்கள் நாய்கள் கிடையாது. 6 அறிவு உள்ள மனிதர்கள் என அண்ணாமலைக்கு அருண்ராஜ் பதிலடி கொடுத்து உள்ளார். ‘கம்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கம்முன்னு இருக்கணும். கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு இருக்கணும். அரசியலில் அப்படியெல்லாம் இருக்க முடியாது. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். இல்லையென்றால் அடிபட்டுதான் போவார்’ என்று பாஜ முன்னாள் தலைவரும், மாஜி ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை விஜய் பற்றி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தவெக கொள்கை பரப்பு செயலாளரும், மாஜி ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண் ராஜ், ‘விஜய் கூறிய டயலாக் அண்ணாமலைக்கு நன்றாக பொருந்தும். அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘பிரதமர் மோடிக்கு நான் நன்றியுள்ள விசுவாசமான நாய். சினிமா நடிகர்களுக்காக ஆதரவு தெரிவிக்க அரசு பதவியை துறந்து விட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட பதவியே எனக்கு தேவையில்லை’ என கூறி இருந்தார். இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அருண்ராஜிடம் தவெக கூட்டணி விவகாரம், அண்ணாமலை விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அருண்ராஜ் கூறியதாவது:
தவெக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அதற்காக தலைவர் ஒரு குழுவை உரிய நேரத்தில் அமைப்பார். தவெக தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.அண்ணாமலை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நாங்கள் யாரும் நாய் கிடையாது. குறிப்பாக நாங்கள் குரைக்கும் நாய்கள் கிடையாது. நாங்கள் ஆறறிவு உள்ள மனிதர்கள். தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள தொண்டர்கள். தரம் தாழ்ந்து நாங்கள் விமர்சிக்க மாட்டோம். டீசண்ட் பாலிடிக்ஸ் பண்ண நாங்கள் இருக்கிறோம். விஜய் தற்போது நடிகர் கிடையாது, முன்னாள் நடிகர். விஜய் நடிப்பை முற்றிலுமாக விட்டுவிட்டு அரசியலுக்கு, மக்கள் சேவை செய்வதற்காக வந்துவிட்டார். ‘அரசியல் விஜய்’ நடிகர் விஜய்யை விட அதிக சக்தி வாய்ந்தவர்.

அதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். தவெக குறித்த சீமான் விமர்சனத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. களத்தில் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும். தமிழருவி மணியன் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை. அவருடைய அறிவுரை யாருக்கு தேவையோ அவருக்கு கொடுத்தால் போதும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,IRS ,Coimbatore ,Arunraj ,Annamalai ,Kammunnu ,Kummunnu ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...