சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தார். மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுத் திருவிழாவில், 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், கன்னியாகுமரி பலதரப்பட்ட சிப்ஸ் வகைகள், பெரம்பலூர் முத்து சோளம், நாமக்கல் புரதச் சத்து நிறைந்த முட்டை உணவுகள், ராமநாதபுரம் பனை மதிப்புக் கூட்டுப் பொருட்கள், நீலகிரி பாரம்பரிய தேநீர், சேலம் மளிகைப் பொருட்கள், சிவகங்கை செட்டிநாட்டுத் தின்பண்டங்கள், 90களில் பிரசித்தி பெற்ற 30 வகையான திருவள்ளூர் தின்பண்டங்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
4 நாட்கள் நடக்கும் இந்த உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அரங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய, சைவ, அசைவ, சிறு தானிய உணவுப் பொருட்களை ருசி பார்த்து செய்முறை மற்றும் விற்பனை அனுபவம் குறித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது :
கடந்தாண்டு மெரினா கடற்கரையில் நம்முடைய துறை 5 நாட்களுக்கு உணவுத் திருவிழாவினை நடத்தியிருந்தது. சென்ற ஆண்டு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கு சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் தாங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை விற்பனை செய்திருந்தார்கள். கடந்த நவம்பர் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 62 லட்சம் ரூபாய் அளவிற்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்தாண்டு பெசன்ட் நகர் கடற்கரையில் துவக்கி வைத்திருக்கின்றோம். சுத்தமான முறையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பரிசோதிக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன. குறிப்பாக அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் இவற்றை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகள் உணவுத் திருவிழா நடைபெறும் தேதிகளை முடிவு செய்தார்கள்.
இந்த உணவுத் திருவிழாவிற்கு சென்னையில் உள்ள பொதுமக்கள், உணவு பிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் எல்லோரும் வருகை தந்து, உணவு வகைகளை ருசித்து, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
