×

100 நாள் வேலை திட்டத்தில் பெயர் நீக்கம் காந்தி மீண்டும் கொல்லப்பட்டார்: ப.சிதம்பரம் வேதனை

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதன் மூலம் அவர் மீண்டும் கொல்லப்பட்டுள்ளார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத செயலில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; இவ்வழக்கில் நீதிபதி சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். வழக்கின் விசாரணையில் அமலாக்கத்துறை பெரும் பிழை செய்துள்ளது. பணப் பரிமாற்றம் என்பது குற்றமல்ல. நாள்தோறும் பணப் பரிமாற்றம் சாமானிய மக்களிடையே நடந்து வருகிறது. ஆனால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்வதே குற்றம். சட்டத்தை மீறிய பணப் பரிமாற்றமே குற்றம்.

அப்படி நடந்தால், காவல்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றச்சாட்டு வைக்க வேண்டும் . ஆனால் இந்த வழக்கில் காவல்துறை அல்லது புலனாய்வுத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறை பதிவு செய்வது சட்ட விரோதம். ஒன்றிய அரசு இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது.

மேல்முறையீடு செய்ததாக தகவல் இல்லை, செய்யலாம் என தகவல்கள் பரவுகிறது, செய்யட்டும் அப்படியானால் அவர்களுக்கு புத்தி தெளியவில்லை என்று அர்த்தம். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வைத்துள்ள பெயர் காந்தியை விட சிறந்த பெயரா? காந்தி பெயரை நீக்கி அதன் மூலம் 77 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை அவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆங்கிலம் ஆகிவிடாது. அதற்கு மாற்று பெயர் இந்தியுமல்ல ஆங்கிலமுமல்ல, ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். விபி ஜி ராம்ஜி, இந்த வார்த்தைகள் அமைச்சர்களுக்கே புரியவில்லை. மகாத்மா காந்தியை விட இந்த திட்டத்திற்கு பொறுத்தமான பெயரா இது. வேலை பார்ப்பவர்களில் மொத்த ஊதியத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

பொருட்கள் செலவிற்கு 75% ஒன்றிய அரசு 25 % மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்திற்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டால், வேலை கேட்கவே முடியாது நிலை இந்த சட்டத்தில் உள்ளது. இந்த சட்டம் ரத்தாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.. வீடு வீடாக மக்களிடையே கொண்டு சேர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Gandhi ,P. Chidambaram ,Chennai ,Former Union Minister ,Mahatma Gandhi ,Former Union Minister… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...