மீனம்பாக்கம்: தமிழக அரசின்மீது நிதிச்சுமை கூடுவதை, நாம்தான் கவனித்து, அதை மீட்கவும் முயற்சிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பேட்டியளித்தார். டெல்லியில் இருந்து நேற்றிரவு பயணிகள் விமானம் மூலமாக சென்னை விமானநிலையம் வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்க வேண்டிய அவசியமோ இல்லை.
தமிழ்நாடு அரசின்மீது நிதிச்சுமை கூடுவதைத்தான், நாம்தான் கவனித்து, ஏழை மக்களுக்கு சேரவேண்டிய உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் குறைவதை தடுத்து காப்பதுடன், அப்பணிகளை மீட்பதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த கருத்தை விட்டுவிட்டு, வேறிடத்தில் விளையாடக்கூடாது என்பதுதான் எனது கருத்து.
தமிழ்நாட்டில் பிரசாரம் செய்வதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தேசிய பாஜ தலைவர்கள் வருவதால், வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்படி அமையும் என்பதை தமிழக மக்கள்தான் சொல்ல முடியும். வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், நான் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கண்டிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
