சென்னை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5000 கோடி மதிப்பிலான 9 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் வரும் 23ம் தேதி ஏலம் விடப்படும் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5000 கோடி மதிப்பில் 9 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி, 11 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1000 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 7.16 சதவீத பிணையப் பத்திரங்கள் 2032 மறுவெளியீடு ரூ.1000 கோடி, தமிழ்நாடு அரசின் 7.23 சதவீத பிணையப் பத்திரங்கள் 2035 மறுவெளியீடு ரூ.1000 கோடி மற்றும் தமிழ்நாடு அரசின் 7.45 சதவீத பிணையப் பத்திரங்கள் 2055 மறுவெளியீடு ரூ.1000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 23ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 23ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
