சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் கோவை, திருச்சியில் அமைய உள்ள நூலகத்திற்கு புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நூல்கள் கொள்முதல் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்கம் வெளியிட்ட அறிக்கை:
கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணினி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உள்பட அனைத்து பாடங்களிலும் புகழ்பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது.
இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் ”புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்” என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (கூகிள் பார்ம்) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5 மணிக்குள் (யூனிகோடு பாண்ட்) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை 29.12.2025 முதல் 5.1.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
