திண்டிவனம்: அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும், பாமக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீதும் விசாரணை நடந்த வேண்டும் என்று ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கட்சி இரண்டாக உடைந்து உள்ளது. இருவரும் கட்சிக்கும், மாம்பழ சின்னத்துக்கும் உரிமைக்கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாமகவுக்கு யாரும் தற்போது தலைவர்கள் இல்லை. இருவரும் சிவில் நீதிமன்றத்திற்கு சென்று பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தது. இந்த சூழலில், பாமக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என கூறி, அன்புமணி தரப்பு விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. விருப்பமனு விநியோகம் என்ற பெயரில் பண மோசடியில் அன்புமணி ஈடுபடுவதாக ராமதாஸ் டிஜிபியிடம் புகார் அளித்து உள்ளார்.
இந்த பரபரப்பான சூழல்நிலையில், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பான பாமக, மாநில நிர்வாகக்குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்தி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன், அருள் எம்எல்ஏ, திருக்கச்சூர் ஆறுமுகம், சுஜாதா கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாமக மாநில நிர்வாக குழுவில் அங்கம் வகிக்கும் 22 பேரில், 18 நபர்கள் பங்கேற்றனர். அப்போது, 23வது நிர்வாக குழு உறுப்பினராக புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம் வருமாறு:
* தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும், வியூகங்கள் அமைக்கவும் ராமதாசுக்கு முழு அதிகாரத்தை இந்நிர்வாகக்குழு வழங்குகிறது.
* தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் அன்புமணி பாமக தலைவர் இல்லை என்பது உறுதியாகிறது. ராமதாசே பாமக. நிறுவனர் மற்றும் தலைவராக இருந்து வழிநடத்த முழு அதிகாரம் பெற்றவர்.
* ராமதாஸ் தலைமையில் கூடிய நிர்வாகக் குழுவில் கூட்டணி குறித்தும், எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கலாம், அதில் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள், வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.
* கடந்த 12ம்தேதி அனைத்து மாவட்டங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் 10.5 இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று நிர்வாகக்குழு தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறது.
* தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலை என்று அலைகிறார் அன்புமணி. தலையை பிய்த்துக் கொண்டு தாறுமாறாக செல்கிறார். அத்தனை அவலத்திற்கும் தலையணை ஓதியவர்களே பொறுப்பு. இதற்காக நிர்வாகக்குழு அன்புமணிக்கு ஆழ்ந்த மந்திரம் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு தலையணை மந்திரத்தில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டுமென நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது. இல்லை என்றால் அன்புமணி மேலும் அவமானங்களையும், கேவலங்களையும் சந்திக்க நேரிடும் என்று நிர்வாகக்குழு எச்சரிக்கிறது.
* 46 ஆண்டுகள் உழைத்து 96,000 கிராமங்களுக்கு நடந்து உருவாக்கிய கட்சி. இதில் நீ தலையிட வேண்டாம். உனக்கு எவ்வித உரிமையும் இல்லை. நீ வேண்டுமானால் புதிதாக ஒரு கட்சியை உருவாக்கிக்கொள். நானே பெயர் வைக்கிறேன். எனது படத்தையும், எனது பெயரையும் பயன்படுத்தாதே என்று ராமதாஸ் தொடர்ந்து சொல்லி வருகிறார். கையாலாகாத, கள்ளத்தனமான அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியை களவாட பார்க்கிறார். வேடிக்கையான பேர்வழி. தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பெயரால் விருப்ப மனு வாங்குகிறார். கட்சியும், சின்னமும் எங்களிடத்தில்தான் உள்ளது என்று ஊரை ஏமாற்றுகிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவார் என்று பார்க்கலாம். ராமதாஸ் சொன்னதுபோல் அன்புமணி அரசியல் கூடிய விரைவில் முடியப்போகிறது. பெற்ற தந்தைக்கே துரோகம் செய்தவர். கட்சிக்காரர்களுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டாரா?. அன்புமணிக்கு உரிமை இல்லாத கட்சியின் பெயரில் விருப்பு மனு வாங்குவது, அதன்மூலம் கல்லா கட்டுவதை இந்நிர்வாகக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
* அன்புமணியின் ஆட்டம், பாட்டம், ஆதாயம் அவைகளுக்காக அசைந்து, வளைந்து, நெளிந்து கொடுத்த தேர்தல் ஆணையம். பொய்யான ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றியது குறித்து ஆய்வு செய்து அன்புமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை இந்நிர்வாக்குழு கேட்டுக் கொள்கிறது.
* கட்சியின் சின்னம் தலைவர் சம்பந்தமான விஷயத்தில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும், மோசடி வேலைகளையும் சேர்த்து சிபிஐ விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அன்புமணி மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமதாஸ் தலைமையில் நடந்த நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பாமக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
* கையாலாகாத, கள்ளத்தனமான அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியை களவாட பார்க்கிறார். வேடிக்கையான பேர்வழி. தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பெயரால் விருப்ப மனு வாங்குகிறார். கட்சியும், சின்னமும் எங்களிடத்தில்தான் உள்ளது என்று ஊரை ஏமாற்றுகிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவார் என்று பார்க்கலாம்.
* தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலை என்று அலைகிறார் அன்புமணி. தலையை பிய்த்துக் கொண்டு தாறுமாறாக செல்கிறார். அத்தனை அவலத்திற்கும் தலையணை ஓதியவர்களே பொறுப்பு.
* யாருடன் கூட்டணி?
பாமக நிர்வாக குழு கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் கூட்டணி சம்பந்தமாக ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது அன்புமணி தரப்பு இப்போதே விருப்ப மனு பெறுவது சம்பந்தமாக பேசிய சில நிர்வாகிகள், நாமும் விருப்ப மனு வாங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், யாருடன் கூட்டணி என்பதை அறிவித்தால்தான் அவர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க வலியுறுத்தினர். இதற்கு கட்சி அங்கீகாரம் தொடர்பாக நிலவும் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ராமதாஸ் தெரிவித்தார்.
