×

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பொங்கல் விற்பனை கண்காட்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்

 

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ் – புத்தாண்டு – பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். இது குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை நாளை சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் துவக்கி வைக்கிறார்.

18.12.2025 முதல் 04.01.2026 வரை நடைபெறும் மதி கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, மூலிகைப் பொருட்கள், சிறுதானிய பொருட்கள், சிப்ஸ் வகைகள், வெட்டிவேர் பொருட்கள், மண்பாண்டங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், மரச் சிற்பங்கள், பெட்ஷீட்கள், மரச் சிற்பங்கள், பட்டுச் சேலைகள், முந்திரி, மிளகு, ஊறுகாய், கைத்தறி துண்டுகள், தலையணை உறைகள், கண்ணாடி வளையல்கள், மசாலாப் பொருட்கள், வத்தல், வடகம், உலர் மீன்கள், பருத்தி வேட்டிகள், வாசனைப் பொருட்கள், மூலிகைத் தைலங்கள், பருப்பு வகைகள், சமையல் பொடிகள், செயற்கை ஆபரணங்கள், கைத்தறி துண்டுகள், மூங்கில் மற்றும் மர கைவினைப் பொருட்கள், தேன் நெல்லி, பாரம்பரிய அவல், இரும்புப் பாத்திரங்கள், வீட்டுத் தயாரிப்பு சாக்லேட்டுகள், கேக்குகள், சத்து மாவுகள், ஆயத்த ஆடைகள், கருப்பட்டி, நெய், தேன், பால் கோவா, பருத்தி உள்ளாடைகள், பாரம்பரிய அரிசி வகைகள், நவீன கைப்பைகள், பரிசுப் பொருட்கள், சணல் பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்திட 46 அரங்குகளும், கிராமிய பாரம்பரியமும், சுவையும் நிறைந்த உணவு வகைகளை விற்பனை செய்திட 5 உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் வார இறுதி நாட்களில் கலை நிகழ்ச்சிகள், இலவச வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இத்தகைய சிறப்புமிக்க மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மாநில அளவிலான மாபெரும் மதி கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சிக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து, பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Religious ,Christmas-New Year Pongal Sale Exhibition of Goods ,Deputy ,Udayaniti Stalin ,Chennai ,Deputy Chief Minister ,Christmas ,New Year ,Pongal ,Fair ,Tamil Nadu Women's Development Institute ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...