அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவின் மிக உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான்’ விருதை அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி, பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜோர்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, இரண்டாம் கட்டமாக எத்தியோப்பியா சென்றடைந்த அவருக்கு அந்நாட்டுப் பிரதமர் அபிய் அகமது அலி உற்சாக வரவேற்பு அளித்ததோடு, விமான நிலையத்திலிருந்து விடுதிக்கு தானே காரை ஓட்டிச் சென்று உபசரித்தார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் 2011ம் ஆண்டுக்குப் பிறகு எத்தியோப்பியா செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் ‘ராணுவக் கூட்டாண்மை’ ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அடிஸ் அபாபாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில், எத்தியோப்பியா நாட்டின் மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை அந்நாட்டுப் பிரதமர் அபிய் அகமது அலி வழங்கினார். இந்த உயரிய விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். மேலும் இது அவருக்கு வழங்கப்படும் 28வது சர்வதேச விருதாகும். விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘இந்த விருதை 140 கோடி இந்திய மக்களுக்கும், இருநாட்டு உறவை வளர்த்த தலைமுறையினருக்கும் அர்ப்பணிக்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
