டெல்லி : டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு 50% ஊழியர்கள் மட்டுமே வர டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து மக்கள் சுவாசிக்கவே முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இந்த நச்சுக்காற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக ஏற்கனவே கவலை தெரிவித்திருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். நரசிம்மா, ‘இந்த மாசுக் காற்று நிரந்தர உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது’ என்று எச்சரித்திருந்தார். எனவே, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்துவிட்டு இணையவழி விசாரணையைத் தேர்வு செய்யுமாறு அவர் முன்பே அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் பள்ளிகளுக்கு விடுமுறை (ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்), கட்டுமானத்துக்கு தடை, பிஎஸ்- 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் நான்கு சக்கர வாகனங்களும் பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக டெல்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீதியுள்ள 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஒரே நேரத்தில் வந்து செல்வது அவசியமில்லை என்றும் வருகை மற்றும் புறப்படும் நேரங்கள் படிப்படியாகப் பிரிக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது நாளை(டிச. 18) முதல் அமலுக்கு வருவதாக டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களைப் பொருத்தவரை, அத்தியாவசிய மற்றும் அவசரப் பொதுச் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய, நிர்வாகச் செயலாளர்கள் தேவைக்கேற்ப அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ அலுவலகத்திற்கு அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அலுவலகங்கள் சுழற்சி முறையில் பணி நேரங்களை அமல்படுத்த வேண்டும், வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
