×

கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்; அதிமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது குறித்து பாஜக முக்கிய ஆலோசனை: மேலிட, தமிழக பாஜ தலைவர்கள் பங்கேற்பு

 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் விரைவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கூட்டணியை பலப்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்கைள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருப்பதால் பலமான கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பது அக்கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாற்று கட்சிகள் யாரும் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை. இது அதிமுகவினர் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கூட்டணியை பலப்படுத்தி, அதிமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்று அமித்ஷா தமிழக பாஜகவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேசி வருவதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேமுதிக மூத்த நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற தங்களது ஆலோசனையை கட்சி மேலிடத்தில் தெரிவித்து வருகிறார்கள். பாமகவில் தற்போது ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. இதில் ராமதாஸ் அணி திமுகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. எனவே, அதிமுக – பாஜ கூட்டணியின் பலம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, பாஜக மேலிடம், தமிழகத்தில் வாக்குகள் சிதறாமல் கிடைக்க ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென கதவை மூடிவிட்டார். எனவே கூட்டணியிலாவது இணைக்கலாமா என பாஜக திட்டமிட்டு வருகிறது.

மேலும், நயினாருக்கு எதிராக கருத்து தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் மற்றும் டிடிவியை அண்ணாமலை சமாதானம் செய்து வருகிறார். இந்த சூழலில் தான், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அவர், நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணி விவகாரம், எத்தனை தொகுதிகளில் அதிமுகவிடம் கேட்டு பெறுவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 60 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலையும் நயினார் நாகேந்திரன் வழங்கியதாக சொல்லப்பட்டது. அதிமுகவிடம் 55 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்க வேண்டும் என்று முடிவு செய்ததாகம் பரபரப்பாக பேசப்பட்டது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்பி பொன்.ராதாகிருஷ்ணன், மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். டெல்லி சென்று விட்டு வந்த இரு தினங்களில் நயினார் நாகேந்திரன் கூட்டும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் பணி மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தேர்தல் களத்தில் பாஜக தனித்து களமிறங்குமா அல்லது கூட்டணி அரசியலுக்கு முன்னுரிமை அளிக்குமா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான விவாதங்களும் இந்த கூட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள், தொகுதி வாரியான நிலவரம், பலவீனமான பகுதிகளில் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவது, சமூக வாக்கு வங்கி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் உத்திகள் மேலும் மற்றும் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கூட்டணியில் அதிமுகவிடம் இருந்து பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது குறித்து நீண்ட நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலிட தலைவர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது. எனவே, பாஜகவின் இந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : BJP ,Kindi ,Atamughu ,Malitha ,Bahia ,Chennai ,Tamil Nadu Assembly elections ,Congress ,Dima Alliance ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...