பெர்லின் : நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள உற்பத்திச் சூழல் அமைப்புகளுடன் கூடிய உயர்தர வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்கு முனிச் நகரில் உள்ள ஆடம்பர கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ கார் காட்சியகம் மற்றும் ஆலையை பார்வையிட்டார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,” தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த BMW கண்காட்சி மற்றும் BMW ஆலையை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி முறையை மிக அருகில் காணும் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. BMW உடன் இணைந்து உருவாக்கப்பட்ட நமது TVS நிறுவனத்தின் 450சிசி மோட்டார் சைக்கிளைப் பார்த்தது ஒரு சிறப்பு. இந்தியப் பொறியியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காண்பது பெருமையாக இருந்தது. உற்பத்தித் துறைதான் வலுவான பொருளாதாரத்தின் முதுகெலும்பு. ஆனால் இந்தியாவில் உற்பத்தித் துறை சரிவைச் சந்தித்து வருவது வருத்தமளிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள உற்பத்திச் சூழல் அமைப்புகளுடன் கூடிய உயர்தர வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்குவது அவசியம்,”இவ்வாறு தெரிவித்தார்.
