மழை காலங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீரால் பாதிப்பு: புதிய மேம்பாலம் கட்ட மக்கள் வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானையில் இருந்து தோட்டாமங்கலம் செல்லும் பிரதான சாலையின் குறுக்கே உள்ள சூச்சணி தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு, மேம்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் இருந்து சூச்சணி வழியாக தோட்டாமங்கலம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் வழித்தடத்தில் சூச்சணி, கிளவண்டி கோனேரிக்கோட்டை, கொட்டாங்குடி, திருவடிமிதியூர், தோட்டாமங்கலம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் அப்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு பருவமழை காலங்களில் பெய்த தொடர் கனமழையினால், இந்த பிரதான சாலையின் குறுக்கே செல்லும் சூச்சணி தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் பருவமழை காலங்களில் அப்பகுதிகளில் இருந்து திருவாடானைக்கு அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்காக வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் நீரில் மூழ்கிய இந்த தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் கல்லூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பருவமழை காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூழ்கிய இந்த தரைப்பாலத்தை பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் கயிறு கட்டி விட்டனர்.

அதனை பிடித்துக் கொண்டு அப்பகுதி முதியவர்களும், பெண்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளும் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய இந்த தரைப்பாலத்தை தினசரி கடந்து செல்லும்போது ஒருவித அச்சத்துடனையே சென்று வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சூச்சணி,கல்லூர், திருவாடானை, கோனேரிகொட்டை, அஞ்சுகோட்டை ஆகிய கண்மாய்களில் மழைநீர் நிரம்பி உபரி நீரானது கழுங்கு பகுதியில் வெளியேறி வரத்துக்கால் மூலம் மணிமுத்தாறு வழித்தடத்தில் கலக்கும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவாடானை-சூச்சணி பகுதியை இணைக்கும் இந்த பிரதான தரைப்பாலத்தை கடந்து சென்று கடலில் கலக்கிறது.

பருவமழை காலங்களில் ஏற்படும் புயல்களால் தொடர் கனமழை பெய்து இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீரானது இந்த தரைப்பாலத்தின் வழியாக செல்லும்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்குவதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. அதனால் மழை காலங்களில் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பருவமழை காலங்களில் பெய்யும் தொடர் கனமழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு சிறிய மேம்பாலம் கட்டித்தந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேதாஜி மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்: இந்த பிரதான சாலையில் உள்ள தரைப்பாலத்தை கடந்து தான் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்ல வேண்டும். மேலும் இப்பகுதியில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு பருவமழை காலங்களில் பெய்த தொடர் கனமழையால் இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் கழுங்கு வழியாக வெளியேறி மணிமுத்தாறு வழித்தடத்தில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தரைப்பாலம் வழியாக செல்லும்போது தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

இதனால் மழை காலங்களில் இப்பகுதிகளில் இருந்து திருவாடானைக்கு அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக கூட பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு சிறிய மேம்பாலம் கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமெனக் கூறினார். சமூக ஆர்வலர் மூர்த்தி கூறுகையில்: இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் பெய்த தொடர் கனமழையினால் இங்குள்ள கண்மாய்கள் நிரம்பி கழுங்கு வழியாக உபரிநீரானது வெளியேறி மணிமுத்தாறு வழித்தடத்தில் கலந்து இந்த தரைப்பாலம் வழியாக செல்லும்.

அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இடுப்பளவு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும், முதியவர்களும் இந்த தரைப்பாலத்தை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பகுதியில் எவரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்கூட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஆகையால் இந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு சிறிய மேம்பாலம் கட்டித்தந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொணடுவர வேண்டுமெனக் கூறினார்.

Related Stories: