சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருட்டு: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் திருடு போன நகைகள் குறித்து கடந்த மாதம் தான் தெரியவந்ததாக போலீசில் புகார் அளித்தார். விஜய் ஏசுதாஸ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகரான விஜய் ஏசுதாஸ், அவரது மனைவி தர்ஷனா பாலகோபால் ஆகியோர் சென்னை அபிராமபுரம் 3வது தெருவில் வசித்து வருகின்றனர். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் வைரம் பதித்த சில தங்க நகைகளை கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி பார்த்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா பாலகோபால் நகை இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் நகைகள் காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அபிராமபுரம் காவல் நிலையத்தில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ஏசுதாஸ் வீட்டில் பணியாற்றும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: