மும்பை: காசாவைப் பற்றி கவலைப்படாதீர்கள்; முதலில் இந்தியாவை பாருங்கள் என்று மா.கம்யூ கட்சி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்வதாகக் கூறி, மா.கம்யூ கட்சி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும், குறிப்பாக ராணுவ தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. மேற்கண்ட மனு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் நீதிபதி ஆரிஃப் டாக்டர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், ‘உங்களுக்கு காசா பற்றி ஏன் இவ்வளவு கவலை? முதலில் இந்தியாவைப் பாருங்கள். மகாராஷ்டிராவில் பிரச்னைகளே இல்லையா? உங்களது மனுவில் எந்தப் பொதுநலமும் இருப்பதாகத் தெரியவில்லை. முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட மனுவாக இருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒன்றிய அரசின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. நீதிமன்றங்களை அரசியல் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது’ என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினர். நீதிமன்றத்தின் கடுமையான நிலைப்பாட்டால், மா.கம்யூ கட்சியின் வழக்கறிஞர், தான் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். இதை ஏற்ற நீதிமன்றம், அந்தப் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
The post காசாவைப் பற்றி கவலைப்படாதீர்கள்; முதலில் இந்தியாவை பாருங்கள்: அரசியல் கட்சிக்கு ஐகோர்ட் குட்டு appeared first on Dinakaran.
