கோடை வெயிலின் தாக்கம்; கொடைக்கானலில் குளிர் சீசனை அனுபவிக்க வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

கொடைக்கானல்: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட, கொடைக்கானலின் குளிர் சீசனை அனுபவிக்க வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட, கொடைக்கானலுக்கு வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாகவே அதிகரித்துள்ளது.

சுற்றுலா இடங்களான பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், குணா குகை, மோயர் சதுக்கம், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் நேற்று வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் குதிரை சவாரி மற்றும் சைக்கிள் ஓட்டியும் மகிழ்வித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் பகலில் 14 டிகிரி செல்சியஸும், இரவில் 10 டிகிரி செல்சியஸும் என குறைவான வெப்பநிலை நிலவுகிறது. நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் கொடைக்கானல் பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் மழைக்கு பின் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

Related Stories: