ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிட்ட வேதாந்தா: மீண்டும் உற்பத்தியை தொடங்க முடிவு எனத் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யும் முடிவை கைவிடுவதோடு மீண்டும் உற்பத்தியை தொடங்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த தாமிர உற்பத்தி நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பது அந்த மாவட்ட மக்கள் வைத்த குற்றச்சாட்டாகும். ஆலைக்கு எதிராக 2016-ம் ஆண்டு முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றபோது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசும் மூடுவதாக அரசாணை வெளியிட்டது. ஒருபுறம் வழக்குகள் நடந்து வரும் நிலையில் ஆலையை விற்பனை செய்வதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாளிதழ்களில் வேதாந்தா நிறுவனம் விளம்பரம் செய்தது. 7 மாதங்களுக்கு பின்னர் அந்த முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டு விட்டு மீண்டும் விற்பனையை தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் தாமிர இறக்குமதி அதிகரித்துள்ளதால் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவது இயலாத காரியம் என்று வேதாந்தா நிறுவன செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். நிறுவனத்தை மீண்டும் திறக்க உத்தரவிட கோரும் வழக்கு பிப்ரவரி 21-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: