இயற்கை விவசாயம், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி-ராஜபாளையம் அருகே நடந்தது

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே முகவூரில் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி என்.எம்.எஸ். ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், முதலாமாண்டு மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், 16 மாவட்டத்தை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 21 கி.மீ மற்றும் 7 கி.மீ மற்றும் சிறுவர், சிறுமியருக்கு 3 கி.மீ தூரம் உள்ளிட்ட 4 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

தங்கபாண்டியன் எம்.எல்.ஏ, யூனியன் தலைவர் சிங்கராஜ் மற்றும் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் தங்கராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்,

போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை வழங்கினார். போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார். நான்கு பிரிவு போட்டிகளில், முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.66 ஆயிரத்து 600 வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

முதல் மூன்று இடத்தை பிடித்தவர்கள்

ஆண்களுக்கான 21 கி.மீ போட்டியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிசரத் முதலிடம், ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் 2ம் இடம், ஈரோட்டைச் சேர்ந்த சிவானந்தம் 3ம் இடம் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முகவூரைச் சேர்ந்த கௌசிகா முதலிடம், கன்னியாகுமரி மாவட்டம் ஆன்சி இரண்டாம் இடம், கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆன்ட்லின் லிரிண்டா 3ம் இடம் பிடித்து பரிசுகளை வென்றனர்.

17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் முதலிடம், கோவையைச் சேர்ந்த ஆகாஷ் 2ம் இடம், சஞ்சய் சித்தர் 3வது இடம் பிடித்தனர். பத்து வயதுக்குட்பட்டோர் பிரிவில், விருதுநகர் மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் முதலிடம், ரஸ்மிதா 2வது இடம், முனீஸ்வரன் 3வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

Related Stories: