தண்டலம் ஊராட்சியில் ஆய்வின்போது அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்

திருப்போரூர்: தண்டலம் ஊராட்சியில் ஆய்வு செய்ய வந்த மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்டார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேற்று முன்தினம் ஆய்வு செய்ய வந்தார். அவரை, மன்ற தலைவர் ஆனந்தன் வரவேற்றார். பின்னர், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, 5 மற்றும் 6வது வகுப்புகளுக்கு சென்று மாணவ, மாணவியரிடம் பாடப்புத்தகங்களில் உள்ள ஒரு பகுதியை படித்துக் காட்டுமாறு கூறினார். இதையடுத்து ரூ. 23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தண்டலம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டார். பின்னர், அருகிலிருந்த நூலக கட்டிடத்திற்கு சென்று அங்கு தினமும் நாளிதழ்கள் வாங்கப்படுகிறதா, தினமும் நூலகத்தை திறந்து வைக்கிறீர்களா என்று ஊராட்சி செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஊராட்சி செயலாளர் அனைத்து நாட்களிலும் நூலகத்தை திறந்து வைப்பதாகவும், நாளிதழ்கள் வாசிக்க காலை நேரங்களில் ஏராளமானோர் வருவதாகவும் தெரிவித்தார்.  

இதையடுத்து, அருகில் இருந்த கூட்டுறவு கடைக்கு சென்ற கலெக்டர் கடை விற்பனையாளரிடம் அனைத்து பொருட்களையும் பொதுமக்களுக்கு சரியான எடையில் வழங்குகிறீர்களா என்று கேட்டார். பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் உங்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டதற்கு பொதுமக்கள் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது என்றும், பருப்பு வகைகளை கூடுதலாக வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். ஆய்வின்போது, திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், ஒன்றிய ஆணையாளர் பூமகள்தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: