ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருச்சுழி: திருச்சுழியில் ஆக்கிரமிப்பை அகற்ற கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான உச்சி மாகாளியம்மன் கோயில் உள்ளது. சில தினங்களில் இந்த கோயிலில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோயில் பகுதியில் துப்புரவு பணியில் அச்சமுதாய மக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் தனது பகுதியில் துப்புரவு பணியை மேற்கொள்ள கூடாது என தனியார் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி, திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் அருப்புக்கோட்டை - ராமேஸ்வரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால்  அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. தகவலறிந்து வந்த திருச்சுழி தாசில்தார் சிவக்குமார், திருச்சுழி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: