கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை: 5 காவலரை  காவலில் விசாரிக்க மனு


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வழக்கை சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் ராஜா, கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாஜிஸ்திரேட் ஆர்.வெங்கடேஷ் பிரசாந்திடம் சிபிஐ தரப்பினர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், பேராசிரியை நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமி ஆகியோர் நேற்றும் இரண்டாம் முறையாக மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். இருவரிடமும் சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்தனர். இருவரும் மடப்புரம் கோயிலுக்கு சென்றது, புகார் மற்றும் நடந்த சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியானது, புகாரின் மீது உயர் அதிகாரிகளின் அழுத்தம் எதுவும் இருந்ததா,

நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏற்கனவே உள்ள மோசடி புகார்கள், அவற்றின் நிலை குறித்து சிபிஐ தரப்பில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பகல் 1.40 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடந்தது. சிறையில் உள்ள போலீசாரை காவலில் எடுத்து அவர்களது வாக்குமூலம் மற்றும் தகவல்கள் அடிப்படையில் சிபிஐ தரப்பில் முதல்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிகிறது.

* ‘சாப்பிடக் கூட முடியவில்லை’
சிபிஐ விசாரணை முடிந்த வெளியே வந்த பேராசிரியை நிகிதா கூறுகையில், ‘‘நடந்த உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அஜித்குமார் இறந்ததற்கு நான் தினந்தோறும் அழுதுகொண்டே உள்ளேன். இதற்குமேல் அழுவதற்கு என்னிடம் கண்ணீரே இல்லை. வேணும் என்றே ஒருவர் சாக வேண்டும் என்றா நினைப்போம். சாப்பிட கூட முடியவில்லை. காய்கறி வாங்க, பெட்ரோல் போடக்கூட போக முடியவில்லை. கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. ஒரே பிரச்னையாக உள்ளது. ஒருபுறம் மட்டுமே பேசுகிறார்கள். மறுபுறம் பற்றி பேசாதது வருத்தமாக உள்ளது’’ என்றார்.

The post கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை: 5 காவலரை  காவலில் விசாரிக்க மனு appeared first on Dinakaran.

Related Stories: