இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி வருகைக்கு எதிர்ப்பு: கண்டன போஸ்டரால் அதிமுகவினர் அதிர்ச்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வரும் எடப்பாடி பழனிசாமிக்கு முக்குலத்தோர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவும் எதிர்ப்புகளால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி தருவேன் என அறிவித்தார்.

இது முக்குலத்தோர் உட்பட சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ள 67 சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடியை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் தேர்தல் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வர உள்ளார்.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆப்பநாடு மறவர் சங்கம் மற்றும் முக்குலத்தோர் அமைப்புகள், முத்தரையர் சமூகம் உள்ளிட்ட பிற சமுகத்தினரும் எடப்பாடி வருகைக்கு எதிராக, முகநூல், இன்ஸ்டா, வாட்ஸ்அப் குரூப் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களிலும் கண்டன போஸ்டர்களை பதிய விட்டு ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் எடப்பாடியின் வருகைக்கு எதிராக கண்டனம் வலுத்து வருவது, அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி வருகைக்கு எதிர்ப்பு: கண்டன போஸ்டரால் அதிமுகவினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: