தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துசெல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் தற்காலிக பணிநீக்‍கம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துசெல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தூத்துக்குடி முத்தையாபுறம் அருகே கிருஷ்ணாநகரை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டில் கடந்த 4-ம் தேதி 10 சவரன் நகைகள் மாயமானது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அழைத்த புகாரில் பக்கத்துவீட்டை சேர்ந்த சண்முகத்தின் மனைவி சுமதி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 7-ம் தேதி, பெண்காவலர்கள் நர்சினா, கல்பனா, உமாமகேஸ்வரி ஆகிய 3 பேரும், சுமதியை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் மூவரும் சுமதியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இதில் காயமடைந்த சுமதி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், பெண்காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, சரவணன் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமலும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும், பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து, அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பெண்காவலர்கள் மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்தும், மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகனை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.       

Related Stories: