*விவசாயிகள் வேதனை
சேலம் : சேலம் திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை மற்றும் பல்வேறு கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்துள்ளது. கிணறுகளில் வெளியேற்றப்படும் நீர் ரசாயன நுரையுடன் வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் ஜவுளி, விவசாயம், வெள்ளிப்பட்டறைகள், சேகோ தொழிற்சாலைகள், வெல்ல உற்பத்தி ஆலைகள் அதிகளவில் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகள், வெள்ளிப்பட்டறை ரசாயன கழிவுநீர், சேகோ ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும், ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக சேலத்தில் பல நீர்நிலைகள் மாசடைந்து கழிவுநீர் மட்டுமே ஓடுகிறது. சேலம் உத்தமசோழபுரத்தில் ஓடும் திருமணிமுத்தாற்றில், பல ஆண்டாக சாயக்கழிவுகள் ஓடுவதால், நீர்நிலை மாசடைந்து எந்நேரமும் சோப்பு நுரையுடன் கழிவுநீர் ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது. கிணறுகளில் வெளியேற்றப்படும் நீர் சோப்பு நுரையுடன் வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:ஏற்காடு மலைப்பாதையில் உருவாகும் மழைநீர், திருமணிமுத்தாற்றில் கலக்கிறது. திருமணிமுத்தாறு, ஏற்காடு அடிவாரத்தில் தொடங்கி பல கிலோமீட்டர் பயணம் செய்து, பரமத்திவேலூரில் காவிரியில் கலக்கிறது. திருமணிமுத்தாற்றில் பல கிளைகள் பிரிந்து செல்கிறது. மழைக்காலங்களில் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் ஓடினால் பல ஏரிகள், குட்டைகள், குளங்கள் நிரம்பும். இந்த நீரை நம்பி பல்லாயிரம் ஏக்கரில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வளவு சிறப்புமிக்க திருமணிமுத்தாறு, சமீப காலமாக மாசடைந்து வருகிறது. பொன்னம்மாப்பேட்டை செங்கல் அணையில் இருந்து, அதன் வழித்தடத்தில் சாக்கடை கழிவுநீர், சாயப்பட்டறை கழிவுநீர், வெள்ளிப்பட்டறை கழிவுநீர், கோழிக்கழிவுகள், காய்கறிகழிவுகள் உள்பட பல கழிவுகள் திருமணிமுத்தாற்றில் விடப்படுகிறது.
உத்தமசோழபுரம் அருகே ஓடும் திருமணிமுத்தாற்றில், எந்நேரமும் சோப்பு நுரையுடன் கழிவுநீர் ஓடுகிறது. பல ஆண்டாக சோப்பு நுரையுடன் கழிவுநீர் செல்வதால், திருமணிமுத்தாற்றை ஒட்டியுள்ள விவசாய கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது.
அங்குள்ள விவசாய கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் சோப்பு நுரையுடன் வருகிறது. இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது தென்னை மரங்கள் பட்டுப்போகிறது. பயிர்கள் உடனடியாக கருகி விடுகிறது. ெதாடர்ந்து இந்த நீரை பயன்படுத்தியதால் மண்வளம் முழுவதும் கெட்டுபோய் உள்ளது. நிலங்கள் விவசாயப்பணிக்கு உகந்ததாக இல்லை. திருமணிமுத்தாற்றில் இவ்வாறு கழிவுகளை விடும் நிறுவனங்களை கண்டறிந்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
The post திருமணிமுத்தாற்றில் கழிவுகள் ஓடுவதால் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு appeared first on Dinakaran.