சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரி நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டம்

*அரசு பஸ்கள் சிறை பிடிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவிலில் மழை நீர் வடிகால், கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது 2 அரசு பஸ்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நாகர்கோவில் மாநகராட்சி 41 வது வார்டுக்குட்பட்ட சாஸ்தா நகர் பகுதியில், கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன், ரூ.51 லட்சம் செலவில் மழை நீர் ஓடை அமைப்பு, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. மேயர் மகேஷ், பணியை தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக மழை நீர் ஓடைக்காக சாலை தோண்டப்பட்டு வந்தது. பின்னர் திடீரென பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பணி எதுவும் நடக்கவில்லை. சாலை தோண்டப்பட்டு பாதியில் நின்றதால், அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடிய வில்லை. பலமுறை இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் நேற்று காலை நாகர்கோவில் – பறக்கை ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததுடன், அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களையும் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அறிந்ததும் உடனடியாக கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். கவுன்சிலர் அனிலா சுகுமாறனும், இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து பணிகள் உடனடியாக தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாஸ்தாநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் சாஸ்தாநகர் வழியாக தான் மெயின் ரோட்டுக்கு வர வேண்டும். மழை நீர் வடிகால் கட்டுவதற்காக சாலை தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. வீடுகளுக்கு முன் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வயதானவர்கள், குழந்தைகள் வீடுகளில் இருந்து வெளியே வர பெரும் சிரமம் அடைகிறார்கள்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பணி அப்படியே கிடக்கிறது. இது குறித்து பணியாளர்கள் தரப்பில் கேட்ட போது, மாநகராட்சி அதிகாரிகள் குழப்புவதாக கூறி உள்ளனர். திட்ட மதிப்பீடு (எஸ்டிமேட்) தயாரிக்கும் போதே பணிகள் எப்படி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு டெண்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்போது வந்துள்ள அதிகாரிகள் மாறி, மாறி பேசுவதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு மாநகராட்சி ஆணையர் உடனடியாக தீர்வு காண வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினர்.

The post சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரி நாகர்கோவிலில் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: