சென்னை: கர்ப்ப காலத்தில் கணவரால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக நடிகை வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியின் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நடிகை ஸ்ரீதேவி கோபிநாத் என்பவர், ‘வைபர் குட் தேவு’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கேரள பஸ்சில் பெண் ஒருவர் கூறிய பொய்யான பாலியல் புகாரால், அந்த பேருந்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பெண்கள் அனைவருமே தவறானவர்கள் என்ற ரீதியில் இணையத்தில் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து ஸ்ரீதேவி கோபிநாத் தனது கருத்துக்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தனது வாழ்வில் நடந்த துயரமான சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், ‘நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்த போது, எனது கணவராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். எல்லா பெண்களும் கெட்டவர்கள் கிடையாது, தயவு செய்து பாலின ரீதியாக யாரையும் இழிவுபடுத்த வேண்டாம். பொய்யான புகார் அளித்த பெண் கைது செய்யப்பட்டது ஆறுதல் அளித்தாலும், பல பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர்’ என்று அந்த வீடியோவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவி கோபிநாத் தனது கணவருடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
