×

‘என் ஹேர்ஸ்டைல் பிடிச்சிருக்கா…? ‘தி ராஜா சாப்’ பட விழாவில் ரசிகர்களைக் கேட்ட பிரபாஸ்!

 

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட ஹாரர் படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி , நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் மாருதி. தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சங்கராந்தி பண்டிகை சிறப்பாக, ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் VTV கணேஷ் கூறியதாவது:

“இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் தான். அவர்கள் எனக்கு அளித்த வாய்ப்பினால், ‘பீஸ்ட்’ படத்தில் நான் பேசிய ‘யாருடா நீ இவ்வளவு டாலண்ட்டா இருக்க?’ என்ற வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமானது. அந்த ஒரே வசனம் எனக்கு மிகப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. சப்தகிரி அடிக்கடி என்னிடம் சொல்வார் – ‘நீ பல படங்களில் நடித்திருந்தாலும், அந்த ஒரு டயலாக் தந்த புகழ் வேறு எதுவும் தரவில்லை’ என்று. ‘தி ராஜா சாப்’ படத்தில் நான் 55 நாட்கள் வேலை செய்தேன். பிரபாஸ் காருடன் நடித்த அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.”

நடிகை ரித்தி குமார் கூறியதாவது:

“‘தி ராஜா சாப்’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம். பிரபாஸ் எங்களுக்கெல்லாம் டார்லிங் தான். இந்தப் படத்தில் அவரை மாருதி சார், அவர் உண்மையிலேயே எப்படியோ அதே மாதிரி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் அவர்களின் அனைத்து நல்ல பண்புகளையும் நீங்கள் பார்க்க முடியும். இந்த படத்தைப் பார்த்த பிறகு அவரை இன்னும் அதிகமாக விரும்புவீர்கள். ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் ரசித்துப் பாருங்கள்.”

நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது:

“தெலுங்கு திரையுலகின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் இருக்கிறது. பிரபாஸ் போல ஒரு பான்-இந்தியா நட்சத்திரத்துடன், ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு பிரம்மாண்டமான படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு ‘ரெபல் ஸ்டார்’, ‘ரெபல் கடவுள்’. ஆனால் எங்களுக்கெல்லாம் அவர் ‘ராஜா சாப்’. நல்ல மனம் கொண்ட ஒரு உண்மையான நட்சத்திரம் அவர்.

இந்த படத்தில் நான் ‘பைரவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக கதாநாயகிகளுக்குக் காதல் காட்சிகள், பாடல்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் மாருதி சார் எனக்குக் காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் செய்யும் வாய்ப்பை அளித்தார். பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் நிறைந்த படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைக் கண்டிப்பாக ரசிப்பீர்கள்.”

நடிகை நிதி அகர்வால் கூறியதாவது:

“இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான பிரபாஸ் உடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் அவருக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸ் அடிப்பதும், ஸ்டேடியத்தில் ஒரு சிக்ஸ் அடிப்பதும் வெவ்வேறு விஷயங்கள். அந்த அளவுக்கான ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ். ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த மாருதி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. சப்தகிரி, VTV கணேஷ் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. என் சக நடிகைகளான மாளவிகா மற்றும் ரித்தியுடன் பணியாற்றியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் காரும், கிரியேட்டிவ் புரொட்யூசர் எஸ்.கே.என் அவர்களும் எங்களுக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்.”

இயக்குநர் மாருதி கூறியதாவது:

“இன்று நான் இந்த மேடையில் நின்றிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய ஆதரவே. ‘தி ராஜா சாப்’ படத்திற்குப் பின்னால் உறுதியாக நின்ற இரண்டு பேர் இருக்கிறார்கள் — பிரபாஸ் அவர்களும், விஷ்வ பிரசாத் அவர்களும் தான். விஷ்வ பிரசாத் காரும், பீப்பிள் மீடியா குழுவினரும் இந்த படத்திற்காக தங்களின் அர்ப்பணிப்பைக் கொடுத்தார்கள். ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் நடித்துக் கொண்டிருந்த போது, நான் ‘தி ராஜா சாப்’ கதையை அவரிடம் சொல்லச் சென்றேன். கதையைக் கேட்டவுடன் அவர் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்துச் சிரித்தார். உண்மையில் அவர் இந்த படம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ‘பாகுபலி’க்கு பிறகு பிரபாஸுக்கு உலகளாவிய அடையாளம் கிடைத்துவிட்டது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு சிறிய ஊரில் படப்பிடிப்பு நடந்தபோதும் கூட, அங்குள்ள மக்கள் அவரை அடையாளம் கண்டார்கள். அந்த அளவுக்கு ராஜமௌலி சார் உருவாக்கிய பான்–இந்தியா அலை நமக்கு பலன் அளித்து வருகிறது.
இந்தப் படத்தில் ஒரு காட்சி கூட உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், என் வீட்டின் முகவரியை நான் தரத் தயார் — ரசிகர்கள் வந்து நேரடியாக என்னைச் சந்திக்கலாம். இந்த சங்கராந்திக்கு பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் ‘தி ராஜா சாப்’ மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.”

தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:

“பீப்பிள் மீடியா ஃபாக்டரி மிகப் பெரிய நட்சத்திரத்துடன் நாம் உருவாக்கிய மிகப் பெரிய படம் இதுதான். ஆரம்பத்தில் பலர் இது ஒரு சிறிய படம் என்று நினைத்தார்கள். ஆனால் ‘தி ராஜா சாப்’ படத்தை உருவாக்க நாங்கள் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். மாருதி சார் சொன்னது போல, இந்த படம் ஒருவரையும் ஏமாற்றாது. உலகளவில் ஹாரர்–ஃபேண்டஸி வகையில் உருவாகும் மிகப் பெரிய படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். இந்த படத்தை நீங்கள் அனைவரும் மனதார ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.”

பிரபாஸ் கூறியதாவது:

“என் அனைத்து ரசிகர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் ஜப்பானில் ரசிகர்களைச் சந்தித்தபோதும் நான் இதே மகிழ்ச்சியை உணர்ந்தேன். இன்று இங்கே உங்களைப் பார்க்கும் போது அதே சந்தோஷம் மீண்டும் வருகிறது. இன்று நான் உங்களுக்காக புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்திருக்கிறேன். அனில் தடானி எனக்கு ஒரு சகோதரரைப் போல. அவர் வட இந்தியாவில் என் படங்களை முழுமையாக ஆதரித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் அவர்களும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் வந்தாலே அந்த முழுக் காட்சியும் அவருடையதாகிவிடும். இந்த படம் ஒரு பாட்டி – பேரன் கதையாகும். இந்த படத்தில் ஜரீனா வாஹப் என் பாட்டியாக நடித்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும் போது, என் காட்சிகளை மறந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்தி, மாளவிகா, நித்தி ஆகிய மூன்று நடிகைகளும் நடித்துள்ளனர். அவர்கள் மூவரும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் தமன். இப்படிப்பட்ட ஹாரர்–காமெடி படத்திற்கு அவர் சரியான தேர்வு. ஒளிப்பதிவாளர் கார்த்திக் படத்தை மிகவும் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

சண்டைக் காட்சிகளை ராம் லக்ஷ்மன் மற்றும் கிங் சாலமன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத். படம் முதலில் திட்டமிட்டதை விட பெரியதாக மாறினாலும், அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இந்த படம் முழுவதும் அவரின் நம்பிக்கையால்தான் உருவானது. மாருதி பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அவர் இந்த படத்தில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். அவர் எனக்கு ‘ரெபல் யுனிவர்சிட்டி’யில் பயிற்சி கொடுத்தவர் போன்றவர். இந்த படத்தை உருவாக்கும்போது அவர் காட்டிய உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாம் சொல்ல வார்த்தை இல்லை. இந்த படம் ஒரு ஹாரர்–காமெடி. அதே நேரத்தில் அது ஒரு உணர்ச்சி நிறைந்த படம். இந்த படத்தைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள், ரசிப்பீர்கள், மனம் நெகிழ்வீர்கள். இந்த சங்கராந்திக்கு வெளிவரும் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில், ‘தி ராஜா சாப்’ ஒரு மிகப் பெரிய வெற்றியாக வேண்டும். நாளை ட்ரெய்லர் வெளியாகிறது – தவறாமல் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

 

Tags : Prabaz ,The King Chapp ,Prabhas ,Hyderabad ,Maruti ,T. G. Vishwa Prasad ,Kriti Prasad ,Malavika Mohanan ,Niti Agarwal ,
× RELATED ஜமா பாரி இளவழகன் ஜோடியாக ரம்யா ரங்கநாதன்