போலீஸ் இன்ஸ்பெக்டர் மேக்ஸ் என்கிற கிச்சா சுதீப், இரவில் அவரது வீட்டுக்குச் செல்லும் வழியில், 2 அமைச்சர்களின் மகன்களால் தனது சக போலீஸ் ஊழியர்களுக்கு எதிரான குற்றத்தைப் பார்த்து கொதிக்கிறார். அவர்களை அடித்து உதைத்து லாக்கப்பில் வைக்கிறார். ஆனால், திடீரென்று 2 அமைச்சர்களின் மகன்களும் லாக்கப்பில் இறந்து கிடக்கின்றனர். அதன் பின் நடக்கும் அதிரி புதிரி திரைக்கதைதான் மீதி படம். கிச்சா சுதீப்பின் ருத்ர தாண்டவத்துடன் முழு படமும் நகர்கிறது. மேக்ஸ் என்கிற ஹீரோவுக்குள் இருக்கும் அதிரடி வில்லனை வெளியில் கொண்டு வந்து, எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். யாருக்கும் அடங்காத அவர், 2 பேரின் உடலை மறைக்க எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்களை பரபரக்க வைத்திருக்கிறது.
வரலட்சுமி கெத்தாக வந்து, வில்லன்களுக்கு உதவி செய்கிறார். சுனில், வம்சி கிருஷ்ணா மற்றும் அமைச்சர்கள் சரத் லோகித்தாஸ்வா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் வழக்கமான வில்லன்கள். ரெடின் கிங்ஸ்லி காமெடி செய்யாமல் வில்லன்களுக்கு உதவியுள்ளார். திருப்புமுனை கேரக்டரில் இளவரசு தன் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். மற்றும் சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே, பிரமோத் ஷெட்டி, உக்ரம் மஞ்சு, அனிருத் பட், காமராஜூ, கரண் ஆர்யா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால், ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா கடுமையாக உழைத்துள்ளார். அவருக்கு பி.அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை நன்கு கைகொடுத்துள்ளது. விஜய் கார்த்திகேயா எழுதி இயக்கியுள்ளார். ஹீரோயிச கதை என்பதால், பல காட்சிகள் பல படங்களில் பார்த்தவையாகவே இருந்தாலும், அதை அதிவேகமான திரைக்கதையின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.